Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பாண்டிக் கிணறு

Pāndi Well

அமைவிடம்

வாலாந்தூரில் இருந்து குறவக்குடி செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றவுடன் இடப்புறம் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது.


வரலாற்றுக்காலம்

பிற்காலப் பாண்டியர் காலமாக இருக்கலாம்


கூடுதல் விவரங்கள்

இங்குக் காணப்படும் கிணறு, பாண்டியன் கிணறு / பாண்டிக் கிணறு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. எனவே, கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக் கிணறு பாண்டியர் காலத்தில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது இருபது அடி நீளமும் பதினைந்து அடி அகலமும் கொண்ட செவ்வக வடிவில் உள்ள கிணறாகும். மிக நேர்த்தியாக கல்கட்டுமானம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் கல் தொட்டி வாய்க்காலும் கல் தொட்டிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.குடிநீருக்காகவும், வேளாண்மைக்கும் நீர்ப்பாசனக் கிணறாக இது பல நூறாண்டுகளாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. அதன் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன.

பாண்டிக் கிணற்றைப் பாதுகாக்க அருகில் சடையாண்டி கோவில் ஒன்றை முன்னோர்கள் அமைத்துள்ளனர். இங்கு வைகாசி மாதம் பொங்கல் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிணற்றின் முன்பு சூடம், சந்தனம், எலுமிச்சம்பழம் வைத்து, மலர்கள் தூவி ஊர் மக்கள் வணங்குகின்றனர். திருவிழாவின்போது கிணற்றின் தண்ணீரை எடுத்துத்தான் பொங்கல் வைக்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்குக் கருங்கிடாய்கள் வெட்டப்பட்டு, அதிகாலை 3 மணியிலிருந்து சமபந்தி வைக்கப்படுகிறது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர்நிலைகளின் முன்பு பொங்கல் வைத்துக் கிடாய் வெட்டும் பழக்கம் தமிழர் பண்பாட்டில் இப்போதும் காணக்கூடிய ஒன்றுதான். எனினும், ஒரு கிணற்றை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இதுபோன்ற பெரும் திருவிழா அரிதாகும். இக்கிணற்றின் பழைமையையும் வரலாற்றுச் சிறப்பையும் இவ்விழா சுட்டிக்காட்டுகிறது.


ஊர்

சக்கிலியன்குளம்

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்