Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பஞ்சபாண்டவர் குன்று

Panchapandavar Hillock

அமைவிடம்

பஞ்ச பாண்டவர் குட்டு என்னும் சிறு குன்றில் உள்ள இயற்கை குகைத்தளத்தில் அமைந்துள்ளது.


வரலாற்றுக்காலம்

பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாண்டு மற்றும் பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு


கூடுதல் விவரங்கள்

மதுரையிலிருந்து மேலூர், கொட்டாம்பட்டி வழியாகத் திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர்தான் கருங்காலக்குடி. மதுரை மாவட்டத்தில் சங்க காலத்திற்கு முன்பிருந்தே மனித வாழ்வின் தடங்களைச் சுமந்து நிற்கும் இவ்வூர், தொன்மையும் தொடர்ச்சியும் ஒன்றாகக் கலந்த இடமாக விளங்குகிறது. இந்த நிலம், ஆயிரமாண்டுகளைக் கடந்து வாழ்வின் சுவடுகளை நம் கண்முன் நிறுத்துகிறது. இங்கு கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்களும், ஈமச் சின்னங்களும், இந்த நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே வாழ்விடமாக இருந்ததை உணர்த்துகின்றன.

தமிழிக்கல்வெட்டு :

கருங்காலக்குடியின் கிழக்குப் பகுதியில் உள்ள மலைக்குன்றில்,
பஞ்சபாண்டவர் படுக்கைஎன அழைக்கப்படும் தளத்தில்
பாறையில் செதுக்கப்பட்ட கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இவை துறவிளும், பொது மக்களும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள பாறை முகப்பில்,

எழை ஊர் அரிதின் பளிய்...
என்ற வாசகம் கல்வெட்டாகத் தமிழி எழுத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கற்படுக்கைகளை ஏழையூரைச் சேர்ந்த அரிதன் என்பவர் அமைத்துக் கொடுத்தார் என்று இந்தக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
வட்டெழுத்து :

இக்குகைத் தளத்தின் மேற்புறமுள்ள பாறையில், சுமார் 15 அடி உயரத்தில் சமணத் தீர்த்தங்கரர் திருமேனி ஒன்று புடைச்சிற்பமாக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது.

அதன் அருகில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில்,

 ஸ்ரீ அச்சணந்தி செய் வித்த திருமேனி.என்று வாசகம் உள்ளது.

இதிலிருந்து, அச்சணந்தி என்ற சமணத் துறவி இத்திருமேனியைச் செய்வித்தார் என அறியப்படுகிறது. இதன் காலம் சுமார் கி.பி. ஒன்பதாம்பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சிற்பம் அக்காலத்தின் கலை நயத்தையும், ஆன்மிக ஆழத்தையும், சமய நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

இக்குகைத் தளத்தின் மேலேயுள்ள படுக்கை ஒன்றில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டில், பாண்டிய மன்னனின் அதிகாரியாக விளங்கிய பள்ளித்தரையன் என்பவரின் புகழும் செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது, அக்கால அரசியல் நிர்வாகமும் மத வழிபாடும் ஒரே தளத்தில் இணைந்து விளங்கியதை வெளிப்படுத்துகிறது.

கற்திட்டைகள் :

கருங்காலக்குடி ஊரிலிருந்து தென்மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் குரங்குப் பட்டறைஅல்லது குரங்குப் பண்ணைஎனப்படும் இடம் உள்ளது. அங்கே பத்துக்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த  கற்திட்டைகள் கல் வட்டங்களுடன் காணப்படுகின்றன. அவற்றில் பல சிதிலமடைந்துள்ளன, சில இன்னும் நல்ல நிலையில் உள்ளன. அன்றைய மனிதர்களின் இறப்புச் சடங்கினையையும், நம்பிக்கையையும் அதன் நினைவாக எழுப்பப்பட்ட கல் கட்டுமானங்கள் ஊடாக அறிய முடிகின்றன.

இவ்வாறு கல்வெட்டுகள், கற்திட்டைகள், பாறை ஓவியங்கள்,தீர்த்தங்கரர் சிற்பங்கள் என இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வரலாற்றுப் பயணத்தை அசை போடமுடிகிறது.


ஊர்

கருங்காலக்குடி

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

காணொலி

தமிழ் இணையக் கல்விக்கழகம்