Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கல்லறைக் கல்வெட்டு

Tomb Inscription

அமைவிடம்

திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் காணப்படும் கல்லறையில் உள்ள கல்வெட்டு


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டு


ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இக்கல்வெட்டு பாப்பாள் என்ற தேவரடியாருக்கென சமாதி (கல்லறை) எழுப்பியதைக் கூறுகிறது. சுமார் 6 அடி நீளம், 6 அடி அகலம், 6 அடி உயரத்தில் இச்சமாதியானது கட்டப்பட்டுள்ளது. உட்புறத்தில் செங்கல் மற்றும் சுதையும், வெளியே செவ்வக வடிவத்தில் பல கற்களையும் இணைத்து இக்கல்லறை கட்டப்பட்டுள்ளது. இக்கல்லறையின் முன்பக்கத்தில் இரண்டாவது அடுக்கில் சுமார் 1 அடி உயரம் 6 அடி நீளத்தில் கல்வெட்டு காணப்படுகிறது. 3 அடி நீளமுள்ள 2 கற்களை இணைத்து இக்கல்வெட்டு செதுக்கப்பட்டு உள்ளது. இக்கல்வெட்டில் 5 வரிகள் உள்ளன. தாது வருடம் மாசி மாதம் 30ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலிருக்கும் தேவரடியார் பொன்னம்மாள் மகளான பாப்பாள் இறந்து போகின்ற காலத்தில் தன்னுடைய சொத்துக்களை விற்றுத் தனக்குச் சமாதி (கல்லறை) கட்டும்படியும், துவாதசி கட்டளை (பன்னிரண்டாம் திதி) நடத்தும்படியும் அத்தியான சேனாபதி அய்யர் மற்றும் குமாரசாமியா பிள்ளை என்பவர்களிடத்தில் கேட்டுக்கொண்டபடி செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு:

1 உ தாது வரு மாசி மீ 30 திறுப்பறங்குன்றதிலிறுகும் தாசி பொ

2 ன்னம்மாள் மகள் பாப்பாள் யிறந்து போற காலத்தில் தன்னுடைய

3 சொத்துகளை வித்து தனக்கு சமாதிகட்டும் படிக்கும் துவாதெசி கட்ட

4 ளை நடத்தும் படிக்கு அதியான சேனாபதி அய்யற் குமாறுசாமியா

5 பிள்ளை யிடத்தில் சொன்னபடிக்கி நடத்தியிருக்குரது உ.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
ஆவணம் இதழ் 17, பக்கம் 110.
புகைப்படங்கள்

உதயகுமார், வரலாற்று ஆய்வாளர்

உதயகுமார், வரலாற்று ஆய்வாளர்