Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

மாங்குளம் கற்ப்படுக்கைகள்


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


காலம் / அரசன்

சங்க காலப் பாண்டியர்கள்


ஊர்

மாங்குளம்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
"மாங்குளம் என்ற இந்த ஊரில், கழுகுமலை என்ற மலை உள்ளது. அங்கு ஐந்து கற்ப் படுக்கைகளுடன் கூடிய இயற்கைக் குகைத்தளங்கள் உள்ளன. இவை உள்ளூரில் ""பஞ்ச பாண்டவர் படுக்கைகள்"" என்று அழைக்கப்படுகின்றன. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இங்குக் 'கணிநந்தஸிரிகுவன்’ என்ற முனிவரின் தலைமையில் ஒரு துறவியர்க் கூட்டம் வாழ்ந்தது. அத்துறவிகளுக்காகக் கற்படுக்கைகள் செய்து தானமளித்தவர்களின் பெயர்கள் இங்குள்ள 6 கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் நெடுஞ்செழியன் என்ற சங்கக் காலப் பாண்டிய மன்னனின் பெயரும் பொறிக்கப்பெற்றுள்ளது.

முதல் குகைத் தளத்தின் முகப்பில் இரண்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

1ஆம் கல்வெட்டு -

”கணிய் நந்த அஸிரிய்இ குவ அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல் அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கணிநந்த ஸிரிய்குவ் அன் என்பவனுக்குத் தர்மமாக நெடுஞ்சழியனின் அலுவலனாக விளங்கிய ’கடலன் வழுதி’ என்பவன் இப்பள்ளியை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். 'பணஅன் ' என்ற சொல்லுக்கு அரசனின் அலுவலன் என்று பொருள்.

2 ஆம் கல்வெட்டு

“கணிய் நத்திய் கொடிய் அவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் வரும் 'கொடிய் அவன் ' என்ற சொல்லை 'கொட்டியவன் ' என்று படித்தால், முதல் கல்வெட்டை இந்தக் கணிய்நந்தி என்பவன்தான் கல்லில் பொறித்தான் (கொட்டினான்) என்ற பொருள் வரும்.

3ஆம் கல்வெட்டு

”கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்” என்ற கல்வெட்டு ’கணி நந்தஸிரிய்குவனுக்குத் தர்மமாகப் பள்ளி (கற்படுக்கை) அமைத்துக் கொடுத்தவன், நெடுஞ்செழியனின் சகலையாகிய இளஞ்சடிகனின் தந்தை சடிகன் ஆவான்’ என்று தெரிவிக்கிறது.

4 ஆம் கல்வெட்டு

“கணிஇ நதஸிரிய் குவ[ன் ] . . . வெள் அறைய் நிகமது காவிதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்” என்ற கல்வெட்டு 'கணி நந்தஸிரிய்குவனுக்கு வெள்ளறை நிகமத்துக் காவிதியான கழிதிக அந்தையின் மகன் அஸுதன் என்பவன் உறைவிடம் அமைத்துக் கொடுத்தான்’ என்று தெரிவிக்கிறது.

5 ஆம் கல்வெட்டு

”சந்தரிதன் கொடுபிதோன்” என்ற கல்வெட்டுக்கு ’சந்தரிதன் என்பவன் கற்படுக்கை அமைத்துக் கொடுத்தான்’ என்று பொருள்.

6 ஆம் கல்வெட்டு

”வெள்அறை நிகமதோர் கொடிஓர்” என்ற கல்வெட்டுக்கு ’வெள்ளறை என்ற ஊரைச் சேர்ந்த வணிகக் குழுவினர் (நிகமம்) இந்தக் குகைத்தளத்தைச் செதுக்கி (கொட்டி) அமைத்தனர்’ என்று பொருள். இக்கல்வெட்டுகள் “பட்டிபுரோலு' என்ற இடத்தில் பொறிக்கப்பட்ட எழுத்து முறையை ஒத்துப்படிக்கக் கூடிய வகையில் உள்ளன.

நந்தஸிரியக்குவன் என்ற முனிவனுக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் தர்மமாகப் பள்ளி அமைத்துக் கொடுத்தான் . பாண்டிய மன்னர்கள், அசோகன் கல்வெட்டில் குறிப்பிடுவது போன்று, பொது ஆண்டுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டளவிலேயே மிகச் சிறப்புடன் இருந்திருக்கின்றனர் என்பதை இக்கல்வெட்டு காட்டுகிறது. வழுதி என்பது பாண்டியரது குடிப்பெயராகும் . கடலன் என்பதற்கு நெய்தல் நிலத்தினையும் பணவன் என்பதற்கு மருத நிலத்தினையும் உடையவன் என்று பொருள் கூறலாம் . இக்கல்வெட்டில் வணிகர்களுக்குரிய பட்டங்களில் ஒன்றாகிய “காவிதி' என்ற சொல் வருவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் 'நிகமம் ' வணிக நகரத்தினைக் குறிக்கும் பழஞ்சொல்லாகும்.
தகவல்

முனைவர் துர்கா தேவி

குறிப்புகள்
தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள்- பக்கம் 16-22
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி