Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தமிழி /தமிழ்-பிராமி கல்வெட்டுகள்

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

ஞானியார் மடம் சமண குகைத்தளம்


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


காலம் / அரசன்

ஆதன் சாத்தன்


ஊர்

குன்னக்குடி

மாவட்டம்

சிவகங்கை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 3ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
ஞானியார் மடம் எனப்படும் குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பில் இரண்டு தமிழி/ தமிழ் -பிராமி கல்வெட்டுகள் உள்ளன.

1 ஆம் கல்வெட்டு

இக்கல்வெட்டு பொது ஆண்டு 1909ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பொது ஆண்டு 1992இல் ஐராவதம் மகாதேவன் என்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளருடன் சென்ற தமிழ்நாடு அரசு தொல்லியல்துறைக் குழுவினர் கல்வெட்டின் முதல் எழுத்தை அதன் மீது பூசிக்கட்டப்பட்டிருந்த சுண்ணாம்புக் காரையை உடைத்துக் கண்டறிந்தனர். அப்போது அவ்வெழுத்துக்கள் தலைகீழாகவும், இட வலமாகவும் மாற்றி எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. அவ்வெழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தால் பிம்பமாகத் தெளிவாகத் தெரியும். இக்கல்வெட்டில் “காபிஊர் ஆதன் சாத்தன்” என்று எழுதப்பட்டுள்ளது. காபி என்பதில் 'ப்' மெய்சேர்த்து ‘காப்பி’ என்று படித்தால், காப்பி ஊரைச் சேர்ந்த ஆதன் சாத்தன் என்ற ஆட்பெயராக உள்ளது. சாத்தன் என்ற சொல்லில் ‘த்’ புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காப்பியக்குடி என்றொரு ஊர் இன்று சீர்காழி அருகில் உள்ளது. காப்பியக்குடி என்பதற்கு ஒத்த பெயரே 'காப்பிஊர்’ என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.

2 ஆம் கல்வெட்டு

இவ்விடத்தில் காணப்படும் மற்றொரு கல்வெட்டு நீர்வடிவிளிம்பின் மறுபக்கம் உள்ளது. இக்கல்வெட்டில் மூன்று எழுத்துக்கள் தெரிகின்றன. மண்டபக் கட்டடத்தினுள் மேலும் எழுத்துக்கள் மறைந்துள்ளன. இது முன் கல்வெட்டின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். நீர்வடி விளிம்பு இவ்விடத்தில் பாறையின் வடிவிற்கேற்ப உட்சென்று வெளிவருவதால், இக்கல்வெட்டு முன் கல்வெட்டிற்கு அதிக இடைவெளிவிட்டு வெட்டப்பட்டுள்ளது என்றும் கருதலாம். இதுவும் எழுத்துக்கள் கண்ணாடியில் தெரிவது போன்று இடம் வலமாக, மேல் கீழாகப் பொறிக்கப்பட்டதாகும். இக்கல்வெட்டில் “ஊறு து..“ என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன. ’ஊறு’ என்பதில் ‘ற்’ சேர்த்து ’ஊற்று’ என்று கொண்டால், முன் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் நீர் ஊற்று அமைத்தார் என்பது இதன் பொருளாகலாம் என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இக்குகைத்தளத்திற்குச் செல்லும் வழியில் சதுரவடிவச் சுனை ஒன்று பாறையில் வெட்டப்பட்டுள்ளது. அது இன்றும் நீர் தேக்கப் பயன்படுகிறது. இரண்டாவது கல்வெட்டில் சொல்லப்படும் ஊறு என்ற ஊற்றினை இது நினைவுபடுத்துகிறது.
தகவல்

க.த. காந்திராஜன்

குறிப்புகள்
தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் பக்கம் - 78. § சிவங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு
புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்