அமைவிடம்
பெருங்காமநல்லூர் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது.
வழிபாடு
தை மாதத்தில் வரும் முக்கிய நாள்கள், சிவராத்திரி மற்றும் வம்சாவளிகளுக்கு ஏற்ற முக்கிய நாள்களிலும் நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.
கதை
இந்நடுகல்லைப் பற்றி ஒரு செவிவழிக்கதை ஊர் மக்களிடையே சொல்லப்பட்டு வருகிறது. சில காலம் முன்பு ஏரமாயத்தேவர் என்ற வீரர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார் என சொல்லப்படுகிறது. அது பாளையங்களைப் பிரித்து கொண்டிருந்த காலமாக இருந்தது. சாப்டூர் ஜமீனும், தொட்டப்ப நாயக்கனூர் ஜமீனும் பெருங்காமநல்லூரை கைப்பற்ற எண்ணியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஏரமாயன் ஊர் மக்களைத் திரட்டி இவர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார்.
அச்சமயம், பெருங்காமநல்லூர் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. தன் ஊர் மக்களை இப்பஞ்சத்திலிருந்து காப்பாற்ற ஒரே வழி தொட்டப்ப நாயனூரிலிருந்து ஓடைவழியாக தண்ணீர் வரவழைப்பது தான் என்று ஏரமாயன் முடிவு செய்தான். எனவே தொட்டப்பநாயக்கனூர் படைவீரனாக வேலைக்கு சேர்ந்தான்.
இதை அறிந்த சாப்டூர் ஜமீன், இருதரப்பிலிருந்தும் மல்யுத்தப் போட்டிக்கு ஒரு வீரனை அனுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதில் யார் முதுகு முதலில் மண்ணில் படுகிறதோ அவன் தோற்றவனாக கருதப்படுவான் என முடிவு செய்யப்பட்டது. சாப்டூர்க்கு ஆதரவாக “வால்குரு" என்பவன் களம் இறங்கினான். தொட்டப்பநாயக்கனூர் சார்பாக ஏரமாயன் களம் இறங்கினான். மாலையில் ஆரம்பித்த போட்டி இரவு வரை தொடர்ந்தது. வால்குருவின் முதுகு முதலில் மண்ணைத் தொட்டது. ஏரமாயனுக்கு வெற்றி நெருங்கும் நேரத்தில், வால்குரு சூரிகத்தியால் ஏரமாயனை தாக்கி விடுகிறான். உடனே ஏரமாயன் அதே கத்தியால் வால்குருவை தாக்குகிறான். மல்யுத்தப் போட்டியில் இருவரும் இறந்துவிடுகின்றனர்.
வால்குருவின் முதுகு மண்ணில் கிடந்தது. அவன் மேல் ஏரமாயனின் உடல் கிடந்தது. ஊர் மக்கள் மற்றும் ஜமீன்தார்கள் இவர்களைக் காணும்போது ஏரமாயன் வெற்றிப் பெற்றதை அறிந்து கொண்டனர். "என் படை சார்பாக ஏரமாயன் உயிரிழந்துள்ளான். அதற்கு பரிசாக என்ன வேண்டுமென்று கேளுங்கள்", என்று தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார் ஏரமாயனின் மனைவியைக் கேட்டார். அதற்கு அவள் தொட்டப்பநாயக்கனூரில் தேங்கிக் கொண்டிருக்கும் தண்ணீரை வாய்க்கால் வெட்டி தங்கள் ஊரான பெருங்காமநல்லூர் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று கூறினாள். பின் கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் வந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊர்
பெருங்காமநல்லூர்
மாவட்டம்
மதுரை