Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வெயிலுகந்த அம்மன் கோயில்

Veyil Ugandha Amman Temple

கோயிலின் வேறு பெயர்

மாரியம்மன் கோயில்


அமைவிடம்

திருப்பரங்குன்றத்தில் தென்கால் கண்மாய் ஓரத்தில், தொடர்வண்டிப் பாதைக்கும், சாலைக்கும் நடுவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் வேண்டுபவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.


ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
வெயில் உகந்த அம்மன்
தல மரம்
வேப்ப மரம்
பூசைக்காலம்
அதிகாலை 5:30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
மழை வேண்டுதல், நோய் நீக்கம், உடற்குறை ஆகியவற்றிற்காக இக்கோயிலில் பலியிடுதல், பொங்கலிடுதல் போன்ற வழக்கங்களும், பிள்ளைகளுக்கு வெண்புள்ளி மற்றும் கரும்புள்ளி குத்தி நேர்த்திக் கடன் செலுத்தல் போன்றவைகளும் இங்கு நடைபெறுகின்றன. இக்கோயில் திருவிழாவில் ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடப்படுவதை இன்னும் காணமுடிகிறது.

இக்கோயிலின் உற்சவமூர்த்தி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ளது. திருவிழாக் காலங்களில் முருகன் கோயிலிலிருந்து அவ்வுத்சவமூர்த்தி நாள்தோறும் காலையில் எடுத்து வரப்பட்டு, இரவு விழா முடிந்ததும் முருகன் கோயிலுக்கே கொண்டு சென்று வைக்கப்படுகிறது. இக்கோயில் திருவிழாவின் இறுதி நாளான தேர்த்திருவிழாவன்று இக்கோயிலின் சட்டைத்தேர், முருகன் கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு, அங்கு இரவு முழுவதும் கூத்து (நாடகம்) நடைபெறுகிறது. இவ்வாறு கூத்து நடத்துவதற்கெனத் திருமலை நாயக்கரால் வலையன்குலத்தைச் சேர்ந்த கூத்து கட்டுபவர்களுக்கு மானியங்கள் (வலையன்குளமும் அதைச் சுற்றி 48 கிராமமும்) கொடுக்கப்பட்டு, ”திருமலை மெச்சான்” என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
காவல் தெய்வங்களுக்கு சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் சீரமைக்கப்பட்டுள்ளது. அர்த்தநாரீசுவரர், விநாயகர், காலபைரவர், மாணிக்கவாசகர், கருப்பண்ணசாமி, கத்தரிக்காய் சித்தர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் சந்நிதிகள் இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளன. கோயிலின் நுழைவாயிலில் பெரிய பூதகணங்கள் சிற்பம் காணப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 16-17ஆம் நூற்றாண்டு
தல வரலாறு / கதைகள்
திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை நகர் முழுவதும் கொடிய அம்மைநோயால் பாதிக்கப்பட்டபோது, மக்கள் பயந்து திருமலை நாயக்கரை வேண்டினர். திருமலை நாயக்கர் என்ன செய்வதென்று அறியாது கவலை கொண்ட பொழுது, இவ்வூர் பெரியவர்கள் வெயிலுகந்த அம்மனுக்கு நாடகம் நடத்தி விழாக் கொண்டாடினால் நோய் விட்டுப்போகும் என்று கூறினர். அதன்படி வலையன்குளத்தைச் சேர்ந்த கூத்து கட்டுபவர்களை (சேர்வைகள் என்று இங்கு அழைக்கின்றனர்) அழைத்து வந்து திருமலை நாயக்கர் கூத்து நடத்தினார் என்றும் இங்கு ஒரு செவிவழிச் செய்தி உள்ளது.

இதற்காக 48 கிராமங்களை மானியமாகத் திருமலைநாயக்கர் கொடுத்தார் என்றும் செய்தியுள்ளது. இன்றும் இக்கிராமங்களிலிருந்து இவர்களின் திருமணம், இறப்புப் போன்ற சடங்குகளுக்கு இக்கிராம மக்கள் மரியாதைகள் செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கான செப்புப்பட்டயம் ஏழுமலை சமீனில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களை 'மெச்சனார் குடும்பம்' என்றும், இவர்கள் 25 குடும்பங்களாக இப்பொழுது வாழ்ந்துவருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. நிலமானியமாக விடப்பட்ட 48 கிராமங்களில், இப்பொழுது வலையங்குளம் மற்றும் நல்லூர் என்ற இரு கிராமங்கள் மட்டுமே இவர்கள்பால் எஞ்சி உள்ளன. இவர்களது 25 குடும்பத்தினரும் இக்கோயில் நாடகத்திற்கு வந்துவிடுவார்கள். இல்லையெனில் நோய், நொடி ஏற்பட்டு இறப்பு வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். நாடக முடிவில் அம்மனுக்குச் சாற்றப்பட்ட 16 முழச்சேலை இவர்களுக்கு மரியாதைப் பரிவட்டமாக அளிக்கப்படுகிறது. இவர்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்தால், முருகன் கோயிலிலிருந்து ’மரிக்கைப் பரிவட்டம்’ என்று மரியாதை செய்யப்படுகிறது.

நாயக்கர் காலத்திலிருந்தே மார்க்கண்டேயன், அபிமன்யு சுந்தரி என்ற இரண்டு நாடகங்களைத் தான் நடத்தி வருகிறார்கள். வேறு எந்த நாடகம் நடத்தினாலும், பரிவட்ட மரியாதையை ஏற்கும் பொழுது, ஆண் மற்றும் பெண் வேடதாரிகள், மார்க்கண்டேயன், அபிமன்யு சுந்தரி நாடக மாந்தர்களின் பெயரைக் கூறித்தான் மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்கள். இக்கோயில் திருவிழாக்களில் கிராம மக்கள் பெருமளவில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்கிறார்கள்.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
செல்லும் வழி
மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
திருப்பரங்குன்றம் கோயில் அருகே தங்கும் விடுதிகள் உள்ளன.
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்