Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வெம்பக்கோட்டை வரலாறு

History of Vembakottai

ஊரின் வரலாற்றுப் பெயர்

வெண்பைக்குடி


பெயர்க் காரணம்

இவ்வூரை ஆண்ட மன்னன் ஒரு கோட்டை கட்ட எண்ணிய போது, வெண்புள் என்ற பறவை ஓரிடத்தில் வட்டமிட்டதால் அங்குக்கோட்டை கட்டப்பட்டது. இது 'வெண்புக் கோட்டை' என்றழைக்கப்பட்டு, இப்பெயரே பின்னர் 'வெம்பக் கோட்டை' என்று மாறியதாகச் செவிவழிச் செய்தி கூறப்படுகிறது. ஒரு சமயம் நாயக்க மன்னன் ஒருவன் வெகுண்டு எழுந்து போர்செய்து இந்தக் கோட்டையை அழித்ததன் காரணமாகவும் இந்தப் பெயர் உண்டானதாகக் கூறப்படுகிறது. கல்வெட்டுகளில் இவ்வூர் முதலில் 'வெண்பைக்குடி' என்று குறிப்பிடப்பட்டுப் பின் 'வெண்பைக் கோட்டை' என மாற்றம் பெறுவதைக் காண முடிகிறது. இது பாண்டியர் காலத்தில் முக்கிய இடமாகத் திகழ்ந்தது. இவ்வூரின் பழைமை 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை, இங்கு கண்டறியப்பட்டுள்ள நுண்கற்கருவிகள் மூலமாக அறியலாம். மேலும் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை இங்கு கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் கருப்பு சிவப்பு பானை ஓடுகளைக் கொண்டு கணிக்கலாம். இது தவிர கல்லாக மாறிய யானையின் கடைவாய்ப் பல்லும் இங்குக் கண்டறியப்பட்டுள்ளது.


ஊர் வரலாறு

வெம்பக்கோட்டையில் பொது ஆண்டு 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கிடைத்துள்ளது. அச்செப்பேட்டில் கம்பளத்து நாயக்க இனத்தின் தீர்மானத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அளவு 35x15 செ.மீ உள்ள இச்செப்பேட்டில் முன்பக்கம் 16 வரிகளும் பின்பக்கம் 17 வரிகளுமாக 33 வரிகளில் வாசகம் உள்ளது. இச்செப்பேடு பொது ஆண்டு 1574ல் வெளியிடப்பட்டுள்ளது. ஆச்சிரமக் கவுண்டர் என்பவர், மதுரை வீரப்ப நாயக்கர் மற்றும் நெல்லை அதிவீரராம பாண்டியன் ஆகியோரின் ஆதரவுடன் குண்டாறு, தாமிரபரணி, இராமேசுவரம், தென்காசி ஆகியவற்றிற்கிடையே உள்ள கம்பளத்துக் கவண்டர்களிடம் இனவரி வசூலித்து வந்தார். ஆனால், வெம்பக்கோட்டை புல்லக் கவுண்டர் அதிவீரராம பாண்டியன் பண்டாரத்தில் வாதாடி இனவரி வசூலைத் தடுத்தார். இவரது சேவையைப் பாராட்டி மேற்சொன்ன நான்கு எல்லைகளுக்குட்பட்ட கம்பளக் கவுண்டர்கள் ஒன்றுகூடி இவருக்கு வெகுமதியாக 1500 பொன் வசூலித்துக் கொடுப்பதாக முடிவுசெய்தனர். இதுவே இச்செப்பேடு கூறும் வரலாறாகும்.


ஊர்

வெம்பக்கோட்டை

மாவட்டம்

விருதுநகர்

கூடுதல் விவரங்கள்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடந்து வரும் அகழாய்வில், பல பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி,சங்கு வளையல், தங்க ஆபரணங்கள், விலங்கின் பல், சதுரங்க காய்கள், போன்றவை கிடைத்ததுள்ளன. இதன்மூலம், இப்பகுதி தொடர்ச்சியாக மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது. மேலும் இங்கு வாழ்ந்த மக்கள் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது.

வெம்பக்கோட்டையில் உள்ள ’சொக்கநாத சுவாமி கோயில்’ பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இவ்வூர் கல்வெட்டுகளில் இக்கோயில் ’விக்கிரம பாண்டீசுவரர் கோயில்’ என அழைக்கப்படுகிறது.

தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

போ.கந்தசாமி