Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தென்கரை வரலாறு

History of Thenkarai

ஊரின் வரலாற்றுப் பெயர்

சேந்தனேரி கட்டிகல்லூர்


பெயர்க் காரணம்

சங்ககாலத்தில் இவ்வூர் கள்ளூர் என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு சங்க கால இலக்கியமான அகநானூற்றின் 256ஆவது பாடல் சான்றாகச் சொல்லப்படுகிறது. கட்டி என்ற சிற்றரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததால் இவ்வூர் கட்டிக் கள்ளூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் முற்கால பாண்டியன் செழியன் சேந்தன் என்பவன் இவ்வூரில் சேந்தன் ஏரி என்ற நீர் நிலையை அமைத்ததால் இவ்விடத்திற்கு சேந்தனேரி கட்டிக் கள்ளூர் என பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டில், இப்பகுதியை ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டியன், இப்பகுதியை பராக்கிரம பாண்டியபுரம் என்றும், பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த முதலாம் குலசேகர பாண்டியன் இப்பகுதியை குலசேகரபுரம் என்றும் பெயரிட்டனர். இருப்பினும் கட்டிக் கள்ளூர் என்ற பழம் பெயர் மக்களின் வழக்கில் நிலைத்திருந்தது. பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இவ்வூருக்கு 'தென்கரை' என்ற பெயர் ஏற்பட்டதாக அக்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வைகை நதி, மதுரை மாவட்டம் வழியாக, தெற்கு திசையில் பாய்வதால், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஊர் ’தென்கரை’ என்று அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.


வீடுகளின் எண்ணிக்கை

2565


ஊர்

தென்கரை

மாவட்டம்

மதுரை

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
கள்ளர், கவுண்டர், பள்ளர், பறையர், சக்கிலியர்,மூப்பனார், பிள்ளைமார்.
ஊர் வரலாறு

வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தென்கரை என்ற இவ்வூரில் கடைகற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்துள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகளும் காணப்படுகின்றன. இடைக்காலத்தில் இப்பகுதி ஒரு பௌத்த மையமாக இருந்துள்ளது என்பது அக்கால கல்வெட்டின் மூலம் தெரிகிறது.

மேலும், பொது ஆண்டு 10ஆம் நூற்றாண்டில், மன்னன் ’சோழன் தலை கொண்ட’ வீரபாண்டியன் காலத்தில், இவ்வூரில் மூலநாத சுவாமி என்ற சிவன் கோயில் கட்டப்பட்டது. இது பொது ஆண்டு 11-12 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. பின்னர் பிற்கால பாண்டியர் காலத்திலும் நாயக்கர் ஆட்சி காலத்திலும் தொடர்ந்து இக்கோயில் சிறப்பாக பராமரிக்கப்பட்டதால் இன்றுவரை மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. பொது ஆண்டு 10-12 ஆம் நூற்றாண்டு அளவில் வீரபாண்டியால் கட்டப்பட்டிருந்த வீரசேகர விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலும் இங்கு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்

முனைவர் மகாலிங்கம்

குறிப்புகள்

மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 149. Catalogue of Archaeological Sites Vol.1, page 307.

புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி